திமுக ஆட்சியமைத்தபோது சென்னையில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்க மழைநீர் வடிகால் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை முழுவதும் பல பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களில் போக்குவரத்தில் பல சிக்கல்கள் எழுந்தாலும், மழை காலங்களில் மழை நீர் தேங்காமல் உடனடியாக வடிந்து வருகிறது.
ஆனால் சில பகுதிகளில் நாட்கள் பல ஆகியும் மழைநீர் வடிகால் பணிகள் முழுவதுமாக முடிவடையாமல் அரைகுறையாக கிடக்கின்றன. அவ்வாறாக தோண்டப்பட்டு கிடக்கும் பள்ளங்களில் சிலர் தவறி விழும் சம்பவங்களும் நடக்கின்றன. விரைவில் மழைக்காலமும் தொடங்க உள்ள நிலையில் அதற்கு அரைகுறையாக இருக்கும் பணிகளை முழுவதுமாக முடிக்க சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தி வருகிறது.
மேலும் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி தடுப்புகள் அமைப்பது, எச்சரிக்கை பதாதைகள் வைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.