ஊராட்சிமன்ற தலைவர் வெட்டிக் கொலை; மர்ம கும்பல் போலீஸிடம் சரண்! – கடலூரில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (09:23 IST)
கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் போலீஸிடம் சரணடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள அருங்குணத்தை சேர்ந்தவர் நிலவழகன் என்ற சுபாஷ். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கீழ் அருங்குணத்தில் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் மீது ஏற்கனவே காவல்நிலையத்தில் சில வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுபாஷ் மற்றும் அவரது நண்பர் மணிக்கண்டன் அருங்குணத்தில் உள்ள ஒரு நிலப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது கரும்புக்காட்டில் மறைந்திருந்த மர்ம கும்பல் திடீரென சுபாஷையும் அவரது நண்பரையும் சுற்றி வளைத்து தாக்க தொடங்கியுள்ளது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் சராமாரியாக வெட்டிய அந்த கும்பல், சுபாஷ் ஆதாரவாளர்கள் வீடுகளுக்கும் சென்று சூறையாடி விட்டு சென்றுள்ளனர்.

மர்ம கும்பல் தாக்கியத்தில் சுபாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மணிக்கண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்த கொலைக்கு முன்பகை காரணம் என தெரிய வந்துள்ளது.

சுபாஷுக்கும் அந்த பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பினரிடையே எழுந்த மோதலில் தாமோதரன் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சுபாஷும் சேர்க்கப்பட்டுள்ளார். இறந்த நபருக்காக பழிவாங்க காத்திருந்த தாமோதரன் தரப்பினர் சுபாஷை வெட்டிக் கொன்றது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சுபாஷை வெட்டிக் கொன்ற 11 பேர் தாமாக முன் வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்