முழு அடைப்பு ; 900 இடங்களில் போராட்டம் ; 1 லட்சம் பேர் கைது : ஸ்தம்பித்த தமிழகம்

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (08:37 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நேற்று நடத்தப்பட்ட  முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

 
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாததோடு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் வேறு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கும் 3 மாத கால அவகாசம் வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
எனவே, இதைக்கண்டித்து திமுக தரப்பில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு வணிகர் சங்கம் உட்பட காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினரும் ஆதரவு அளித்திருந்தன. இதற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுக்கவே, நேற்று தமிழகம் முழுவதும் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 

 
அதோடு, திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் நேற்றும் தமிழகமெங்கும் மறியல் போராட்டங்களை முன்னெடுத்தது. சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தை துவக்கிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வாலஜா சாலை வழியாக, மெரினாவில் உள்ள அண்ணா சமாதியை நோக்கி பேரணியாக சென்றார்.  அவருடன் திருநாவுக்கரசு, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சென்றனர். அப்போது, தடுப்பு சுவர்களை நிறுத்தி இந்த பக்கம் செல்லக்கூடாது எனக் கூறினர். ஆனாலும், அவற்றை பொருட்படுத்தாமல் திமுகவினர் அண்ணா சமாதியை நோக்கி அவர்கள் செல்ல முயன்றனர். இதனால், போலீசாருக்கும், திமுகவினருக்கும் மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  ஆனால், உழைப்பாளர் சிலை அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

எனவே, ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு, ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
 
தமிழகம், புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் 900 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டது. மத்திய அரசின் கீழ் வரும் வங்கிகளில் நுழைந்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கல்வீச்சில் 41 பேருந்துகள் சேதமடைந்தன. அதேபோல் 6 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். பல இடங்களில் அரசு பேருந்துகள் மறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 1 லட்சம் பேரை போலீசார் கைது செய்தனர். 
 
மொத்தத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்