தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டு முடிவடைந்து, வரும் 26 ஆம் தேதி இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டு, கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து ஆலோசனை வழங்கிய அவர், முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறும் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு முறை விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள அவர், ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மத்தியில் சில முக்கிய கருத்துகளை தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.