பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (15:33 IST)
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இவ்வழக்கு மீதான விசாரணையை சிபிசிஐடி போலிஸார் சிபிஐயிடம் இன்று  முழுமையாக ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டியது தொடர்பாக வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மணிவண்ணன் என்பவர் போலீஸாரிடம் சரணடைந்தார்.
 
அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப் பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
 
மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன.
 
இதனையடுத்து இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான  5பேரை கைது செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் சமீபத்தில்,  கணொளி காட்சி மூலம் குற்றவாளிகள்  5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை. இதனையடுத்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்னன் ஆகியோரின் நீதிமன்ற காவலை வரும் மே 6 ஆம் தேதிவரைக்கும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 
 
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 
இதனையடுத்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணஙகளும் குற்றப்பிரிவு புலனாய்வு துறையிடமிருந்து இன்று சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
பொள்ளாச்சி வழக்கில் சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் இதுவரை 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுள்ளன.
 
கடந்த மார்ச் 16 ஆம்தேதி பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்