பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர் பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்த பெண் ஒருவரின் பெயர் மற்றும் அவரின் முகவரி போலிஸாரால் வெளியிடப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இது போன்ற பாலியல் புகார் கொடுக்கும் பெண்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இது குறித்த கேள்வி எழ்ந்தபோது எஸ்.பி. பாண்டியராஜன் அலட்சியமாக தவறுதலாகப் பெயர் வெளியிடப்பட்டு விட்டது எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேற்கொண்டு புகார் அளிப்பதை தடுக்கும் பொருட்டே போலிஸ் இந்த செயலை செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவெண்டும் எனவும் கூறப்பட்டது. அதையடுத்து இப்போது புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட எஸ்.பி மதுக்கடைகளை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் செயதபோது அதில் ஒரு பெண்ணை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.