வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாமக, தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தர்மபுரியில் அன்புமணிக்கு வாக்கு சேகரிக்க அதிமுக எம்.எல்.ஏ செம்மலை வந்திருந்தார். இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அதிமுக தொண்டர் ஒருவர் அன்புமணியை நோக்கி, 'ஐந்து வருடங்கள் எம்பியாக இருந்த நீங்கள் தொகுதிக்காக என்ன செய்தீர்கள்' என்று கேள்வி எழுப்பினார். இதனால் அன்புமணி அதிர்ச்சி அடைய அவருடைய பக்கத்தில் நின்றிருந்த செம்மலை, கேள்வி கேட்ட அதிமுக தொண்டரின் வாயில் அடித்தார். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசார், அந்த தொண்டரை அந்த பகுதியில் இருந்து வெளியேற்றினர்.
அதிமுக கூட்டணியில் பாமகவை இணைத்ததை இரு கட்சியின் தலைவர்கள் ஏற்று கொண்டாலும், அதிமுக தொண்டர்கள் இந்த கூட்டணியை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் அன்புமணி பிரச்சாரம் செய்யும் இடங்களில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அன்புமணிக்காக, சொந்த கட்சியின் தொண்டரையே அதிமுகவின் எம்.எல்.ஏ ஒருவர் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது