உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

Siva

வியாழன், 9 அக்டோபர் 2025 (14:04 IST)
ஹரியானா மாநிலத்தின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒய். பூரன் குமார்  சண்டிகரில் உள்ள தனது வீட்டில் அக்டோபர் 7ஆம் தேதி பணி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முந்தைய நாள் தனது மனைவி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அம்னீத் பி. குமாருக்கு, 9 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதம் மற்றும் உயிலை அனுப்பியுள்ளார்.
 
கடிதத்தில், பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற 12 அதிகாரிகள் மீது மனரீதியான துன்புறுத்தல், நிர்வாக பாரபட்சம் மற்றும் சாதி பாகுபாடு ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியுள்ளார். குறிப்பாக, டி.ஜி.பி. சத்ருஜீத் சிங் கபூர் நிலுவை தொகை கிடைக்க எதிர்ப்பு தெரிவித்தது, தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது, வாகனத்தை வாபஸ் பெற்றது என பல வழிகளில் துன்புறுத்தியதாகப் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஜப்பானில் இருந்த மனைவி அம்னீத், பதற்றமடைந்து கணவருக்கு 15 முறை அழைத்தும் அவர் பதிலளிக்காததால், இளைய மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மகள் வீட்டிற்கு விரைந்து சென்றபோது, தந்தை உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து, மனைவி அம்னீத் பி. குமார், டி.ஜி.பி. சத்ருஜீத் சிங் கபூர் மற்றும் எஸ்.பி. நரேந்திர பிஜார்னியா ஆகியோர் மீது தனது கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக் கோரியுள்ளார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்