கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில், இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோவில் பயணம் செய்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சித்ரதுர்கா நகரில் ஒரு பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின்னால் ஆட்டோ ஒன்று நான்கு பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது, பின்னால் வந்த மற்றொரு பேருந்து அதிவேகமாக ஆட்டோவின் மீது மோதியது. இதனால் ஆட்டோ, முன்னால் சென்ற பேருந்துக்கும் பின்னால் வந்த பேருந்துக்கும் இடையில் சிக்கி, முழுவதுமாக நொறுங்கியது.
இரண்டு பெரிய பேருந்துகளுக்கு இடையில் சிக்கி, ஆட்டோ நொறுங்கிய நிலையிலும் பயணிகள் உயிர் பிழைத்தது, இந்த சம்பவத்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கடவுளின் செயல் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.