சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்ய அரசு பேருந்து மற்றும் மின்சார ரயில்களை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதில் பயணம் செய்யும் மாணவர்கள் பலர் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாகவும், உயிருக்கு ஆபத்தான வகையிலும் சாகச செயல்களில் ஈடுபடுவது தொடர் பிரச்சினையாகி வருகிறது.
இதுகுறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை மாணவர்களை எச்சரித்திருந்தது. ஆனாலும் அதை சிலர் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. சமீபத்தில் வேளச்சேரி – அரக்கோணம் இடையே செல்லும் புறநகர் ரயிலில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு ப்ளாட்பாரத்தில் அதை உரசியபடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் பட்டாக்கத்தி வைத்திருக்காமல் இருக்கும் வகையில் கல்லூரிகள் சோதனையை கடுமையாக்க வேண்டும் என்றும், பொதுவெளியில் பட்டாக்கத்தி வைத்திருந்தால் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.