அதிகமாக விற்பனையான பெரியார் புத்தகங்கள்: ரஜினி காரணமா?

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (13:06 IST)
பெரியார் குறித்து துக்ளக் விழாவில் ரஜினி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள நிலையில் சென்னை புத்தக கண்காட்சியில் பெரியார் புத்தகங்கள் அதிகமாக விற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துக்ளக் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை வெளியிட்டார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல அரசியல் தலைவர்கள் கருத்து கூறிவரும் நிலையில் சென்னை புத்தக கண்காட்சியில் பெரியார் குறித்த புத்தகங்களே அதிகமாக விற்றுள்ளதாக வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தினர் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு பெரியாரின் கொள்கைகளை, எழுத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விடியல் பதிப்பகம் ’பெரியார்: அன்றும் இன்றும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டனர். பெரியாரின் முக்கியமான கட்டுரைகள், தலையங்கங்கள் அடங்கிய இந்த புத்தகம் இந்த ஆண்டும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக பதிப்பகத்தினர் கூறியுள்ளனர்.

சுப.வீரபாண்டியனின் கருஞ்சட்டை பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்களும் அதிகம் விற்பனையாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் “கடந்த ஆண்டு பெரியார் குறித்த புத்தகங்கள் மொத்தமாக 2000 புத்தகங்கள் விற்பனையாகியிருந்தன. இந்த ஆண்டு 3500 புத்தகங்கள் வரை விற்பனையாகியுள்ளன. 25 முதல் 35 வயது உட்பட்டோர் அதிகமாக பெரியார் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்” என கூறியுள்ளார்.

ரஜினி பேசியதை தொடர்ந்து இந்த விற்பனை அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள திராவிட கழக பொது செயலாளர் அன்புராஜ் ”ரஜினி பேச்சுக்கும், பெரியார் புத்தக விற்பனைக்கும் சம்மந்தம் இல்லை. ஆண்டுதோறும் பெரியார் புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டுதான் உள்ளன” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்