தேவர் மகன் பாடலுக்கு மன்னிப்புக் கேட்ட கமல் – எழுத்தாளர் கண்டனம்

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (07:59 IST)
தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் தென் தமிழகங்களில் வன்முறைகளை தூண்டியது தொடர்பாக கமல் மன்னிப்பு கேட்டார்.

தமிழ் சினிமாவின் கிளாசிக்குகளில் தேவர் மகன் படத்துக்கு என்றும் நிலையான இடம் உண்டு. காட்பாதர் படத்தைத் தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை, கமல்-சிவாஜி காம்பினேஷன், இளையராஜாவின் இசை, பி சி ஸ்ரீராமின் நேர்த்தியான ஒளிப்பதிவு என பல்வேறு மாஸ்டர்களின் கைவண்ணத்தில் உருவானப் படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள போற்றி பாடடி பொன்னே எனும் பாடலால் தென் தமிழகத்தில் பல சாதி கலவரங்கள் நடைபெற்றன. சாதி மற்றும் வன்முறைக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் மூலமே வன்முறைகள் உருவானது விவாதத்துக்குள்ளானது. இந்நிலையில் இன்றளவும் சாதிப் போற்றி பாடலாக இருந்து வரும் அந்த பாடலுக்கு மன்னிப்புத் தெரிவித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் விகடனுக்கு அளித்த நேர்காணலில் ‘ அந்த பாடலுக்காக நானும் இளையராஜாவும், உயிரோடு இல்லாத வாலியும் சேர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் எந்த உள்ளர்த்தமும் கொண்டு அந்த பாடலை உருவாக்கவில்லை. இப்போது அந்த படத்தை உருவாக்கினால் நான் தேவர் மகன் எனப் பெயர் வைக்கமாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் கமலின் இந்த மன்னிப்பு திருப்தியளிக்கவில்லை எனவும் அந்த பாடல் உருவாக்கத்தில் இளையராஜா மற்றும் வாலியின் பங்கு எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார். அதனால் அந்த பாடலுக்கான முழுப்பொறுப்பையும் கமலே ஏற்கவேண்டும் எனவும் மன்னிப்புக் கேட்பதற்குக் கூட்டணி தேவையில்லை எனவும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில் ‘விகடன் பேட்டியில் ஜாதியின் பெயரை படத்தின் தலைப்பில் வைத்தது குறித்தும், ஒரு ஜாதியினரை போற்றி ஒரு பாடல் படத்தில் வைத்தது குறித்துமான கேள்விக்கு அன்புக்குரிய கமல் சரியான பதில் சொல்லவில்லை. அந்தப் படம் பரியேறும் பெருமாள், அசுரன் மாதிரியான இரண்டு ஜாதியினரைப் பற்றிய படமே அல்ல. ஒரே ஜாதியினருக்குள் நடக்கும் பங்காளிச் சண்டையும் ஆணவமும்தான் படம்! அதில் அவர்கள் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்கிற அடையாளக் குறிப்பு இல்லாமலேயும் அந்தப் படத்தை எடுத்திருக்க முடியும்.

அந்தப் பாடல் கதாநாயகனை உயர்த்திப் பாடப்பட்டது என்கிறார். கதாநாயகனை உயர்த்திப் பாடிய பாடல்களுக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி படத்தின் பாடல்களில் இருந்து ஏராளமான உதாரணங்கள் அவருக்கும் தெரியும்.தேவர் மகனில் இடம்பெற்ற அந்தப் பாடல் நிச்சயமாக அந்த வகையில் சேராது. அடுத்து.. அப்படி ஒரு பாடலை படத்தில் எழுதியதற்காக அவரும், இளையராஜாவும், மற்றும் மறைந்த கவிஞர் வாலியின் சார்பாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் இளையராஜாவும், வாலியும் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? இயக்குனர் கேட்டதற்கிணங்க இளையராஜா அந்தப் பாடலைப் போட்டிருக்கிறார். அவராக தன்னிச்சையாக இப்படி ஒரு பாடல் இடம் பெற்றாக வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. அதேப் போல திரையுலக வரலாற்றில் எந்தக் கவிஞரும் தன்னிச்சையாக முழு சுதந்திரத்துடன் செயல்படுவதில்லை என்பது உலகிற்கேத் தெரியும். ஒரு கவிஞர் எப்படி அந்தப் பாடலை எழுத வேண்டும் என்று விளக்கமாக கேட்டுக்கொள்ளப்பட்டு அதன்பிறகே எழுதுகிறார்.

அப்படி எழுதிய பாடல்களிலும் நிறைய பல்லவிகளும், சரணங்களும் தரப்படுகின்றன. அவை இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யப்பட்டு பல வார்த்தைகளும், வரிகளும் கவிஞரின் சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி மாற்றி எழுதப்படுகின்றன என்பதே நடைமுறை. ஆக.. ஒரு இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இயக்குனர் விருப்பத்திற்குதான் செய்ல்படுகிறார்கள்.. அப்படியிருக்க ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட பாடல் இடம் பெறுவதற்கும், அந்தப் பாடலின் வரிகளுக்கும் முழுக்க முழுக்க படத்தின் இயக்குனரே பொறுப்பாவார் என்பதெல்லாம் கமலுக்குத் தெரியாமல் இல்லை. அரசியலுக்குத்தான் கூட்டணி தேவை. மன்னிப்பு கேட்பதற்குமா?’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்