அம்மா உணவக ஊழியர்களை நீக்க கூடாது! – ஓபிஎஸ் முதல்வருக்கு கோரிக்கை!

திங்கள், 29 நவம்பர் 2021 (11:10 IST)
அம்மா உணவக ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதாக வெளியாகியுள்ள புகார் குறித்து எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் 600க்கும் அதிகமான அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் பெண்கள் பலருக்கு பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியமைத்திருக்கும் நிலையில் சில மாவட்டங்களில் அம்மா உணவக பணியாளர்களை பணியை விட்டு நீக்க திமுகவினர் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து முதல்வருக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ”அம்மா உணவகங்களில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றுகின்றனர். கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருக்கும்போது, அனைத்து  உணவகங்களும் முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில், தங்களது உயிரை - துச்சமென மதித்து, நேரம், காலம் பார்க்காமல் அல்லும் பகலும் அயராது உழைத்து ஏழை, எளிய மக்களின் பசியை ஆற்றும் மகத்தான பணியைச் செய்தவர்கள். அவர்களை அந்தப் பணியிலிருந்து எடுத்துவிட்டு அங்கு தி.மு.க.விற்கு பணியாற்றியவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது நியாயமற்ற செயல்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “எனவே, முதலமைச்சர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, களத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தீர விசாரித்து, அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளியத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்