நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் பல்வேறு கட்சிகளில் உள்ள அவரது ரசிகர்கள் விலகி ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியில் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் பல ஆட்டம் கண்டுள்ளன. இதனை பிரதிபலிக்கும் விதமாக ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் பேட்டியளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரு அணிகளையும் ஒன்றாக இணைக்க இரு அணிகள் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஓபிஎஸ், அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்காக உருவான குழு கலைக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்தார். இரு அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புவதால் மக்களின் விருபத்திற்கு ஏற்ப அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு இன்றுடன் கலைக்கப்படுகிறது என்றார்.
ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான எதிர்பார்ப்பு தான் அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டதற்கு காரணம் என ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான எதிர்பார்ப்பால் தொண்டர்கள் ஈர்க்கப்படுவதை தடுக்கவே அதிமுக அணி இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டது என்றார். இதன் மூலம் ரஜினியால் தங்கள் தொண்டர்கள் கட்சியை விட்டு அவருடன் போய் சேர்ந்துவிடுவார்கள் என்ற பயம் வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார் மாஃபா பாண்டியராஜன்.