பரந்தூரில் புதிய விமான நிலையங்கள் அமைக்க 20 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என்று அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் புதிய விமான நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாகவும், ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், களத்தில் இறங்காமல் அரசியல் செய்து வருவதாக விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது அவர் நேரடியாக களத்தில் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.