கங்கை நீர் விற்பனைக்கு எதிர்ப்பு: திராவிடர் கழகத்தினர் கைது

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (23:35 IST)
கங்கை நீர் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சென்னை தலைமை தபால் நிலையத்தில் கங்கைபுனித நீர் விற்பனை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை தலைமை நிலைய செயலாளர் வக்கீல் இளங்கோவன் தலைமையில் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, மாவட்ட செயலாளர், குமரன் ஆகியோர் முன்னிலையில் முற்றுகை போராட்டம் நடந்தது. தபால் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 30க்கும் மேற்பட்ட தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.

இது குறித்து, கரு. அண்ணாமலை கூறுகையில்,” கங்கை நதிநீரில் வி‌ஷத்தன்மை இருப்பதாக இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் 2013-ல் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. உலகத்தில் ஓடக்கூடிய 5 நதிகளில் சுகாதாரமற்ற நிலையில் கங்கை நதி இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. கான்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கங்கை நதியில் கலப்பதே காரணம். இந்தியா மதசார்பற்ற நாடு. ஆனால் பிரதமர் மோடி தபால் நிலையங்களில் புனிதநீர் வியாபாரம் செய்கிறார். தபால் நிலையங்களில் அது தொடர்புடைய சாதனங்களை விற்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதம்சார்ந்த புனித நீர் என்று விற்பனை செய்வது தவறு.” என்றார்
 
அடுத்த கட்டுரையில்