தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இரவோடு இரவாக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இந்த ஆட்சி முடியும் வரை நீடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல்வராக பதவியேற்று 20 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என்ற கோஷம் அதிமுகவில் எழுந்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க சென்ற சமயத்தில் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோஷத்தை அதிமுகவினர் முன்னெடுத்தனர். அதற்காக தீர்மானங்கள் கூட நிறைவேற்றப்பட்டு சசிகலாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வமும் தன்னுடைய முதல்வர் பதவியை சசிகலாவிடம் ஒப்படைக்க விரும்புகிறார் என்ற செய்தியையும் அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால் டெல்லி சென்று வந்த முதல்வரிடம் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக தான் பதவியேற்றார் அவர் சின்னம்மா சசிகலாவுக்காக தன்னுடைய முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளார். விரைவில் சின்னம்மா சசிகலா முதல்வராக பதவியேற்பார் என அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.