சேலம் பெரியார் பல்கலையில் புதிய கல்வி கொள்கை அமல்? கொளத்தூர் மணி குற்றச்சாட்டுக்கு பதில்..!

Siva
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (07:39 IST)
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கொளத்தூர் மணி உள்ளிட்ட சிலர் குற்றச்சாட்டு கூறிய நிலையில் பல்கலைக்கழகம் நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவு இன்றி புதிய கல்விக் கொள்கையை தாங்களாகவே அமல்படுத்த முடியாது என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகம் முனைவர் பட்டப்படிப்பிற்கான கையேட்டை அண்மையில் வெளியிட்டது. இதன்படி முனைவர் படிப்பில் சேர 10 பிளஸ் 2 பிளஸ் 4 என்ற அடிப்படையில் 16 ஆண்டுகள் பயின்றிருக்க வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது. இது மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் நடவடிக்கை என இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
தமிழக மாணவர்கள் முனைவர் பட்டம் பெற 17 ஆண்டு படிப்பு தேவைப்படும் நிலையில் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டுள்ள வட மாநில மாணவர்கள் 16 ஆண்டுகள் பயின்றாலே போதும் என்ற நிலை உருவாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க கூடிய உயர் கல்வி வாய்ப்புகள் குறையும் என்றும் எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன் இது தொடர்பாக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் கூறியுள்ளது.
 
திராவிடர் விடுதலைக் கழகமும் இந்த அறிவிப்பை கண்டித்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப் படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது என திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். முதுநிலை பட்டப் படிப்பு முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் இது புதிய கல்விக் கொள்கையின் ஒரு கூறு என்றும் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் தங்கள் அறிவிப்பு தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இளநிலை கலை அறிவியல் 4 ஆண்டு படிப்பு பற்றி கூறியிருப்பது, கடந்த காலங்களில் ஹானர்ஸ் 4 ஆண்டு படித்தவர்கள், மூத்தவர்கள் முனைவர் பட்டம் படிக்க வாய்ப்பளிக்கவே என பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவின்றி புதிய கல்வி கொள்கையை தாங்கள் அமல்படுத்த முடியாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்