ஆளும் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் - ஜெயலலிதா அதிரடி

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (13:26 IST)
புதுச்சேரி மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியைவிட மோசமானது என்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக மைதானத்தில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
 
பின்னர், அந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜெயலலிதா, ”புதுச்சேரியில் விவசாயமே வீழ்ந்து விட்டது. எந்தவித தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. உள்ள தொழிற்சாலைகளுக்கும் மூடுவிழா நடந்து கொண்டிருக்கிறது. கூட்டணி தர்மத்தை குழி தோண்டிப் புதைத்தவர் ரங்கசாமி.
 
கூட்டணி தர்மத்தை மட்டுமல்ல, இந்த மாநிலத்தையே புதை குழியில் தள்ளியுள்ளார் ரங்கசாமி. இவருடைய ஆட்சிக் காலத்திலும் புதுச்சேரி எந்த விதமான வளர்ச்சியையும் அடையவில்லை.
 
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்றாலே இமாலய ஊழல் கூட்டணி என்பது தான் பொருள். நிலக்கரி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்து மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி.
 
இங்கே எந்தவித தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. புதிதாக தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படாததோடு, இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடந்துகொண்டிருக்கிறது. எனவே, காங்கிரஸ்-தி.மு.க. ஊழல் கூட்டணியை இந்தத் தேர்தலில் நீங்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
தற்போது புதுச்சேரி மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியைவிட மோசமானது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த கட்சி அப்படித்தான் இருக்கும். காங்கிரஸ் எதிரி என்றால், என்.ஆர். காங்கிரஸ் துரோகி.
 
ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு சமம். எனவே, என்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
புதுவையில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையப்பெற்றால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகின்றன.
 
அதைப் போலவே புதுச்சேரியிலும் வழங்கப்படும். கைவிடப்பட்ட பெண்கள், ஏழைத்தாய்மார்கள், பெண்கள் குடும்பத்தலைவராக இருக்கின்ற குடும்பங்களுக்கு கறவைப் பசுக்களும், வெள்ளாடுகளும் தமிழ்நாட்டில் வழங்கப்படுகின்றன. அதைப் போலவே புதுச்சேரியிலும் வழங்கப்படும். மகளிர் திருமண உதவித்திட்டம் இங்கேயும் செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்