திரிக்கப்பட்ட வரலாறுகள் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாறு திரிபு குறித்து பேசியுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி “திரிக்கப்பட்ட வரலாறுகளை நம்மிடம் கொடுத்து நமக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை உண்டாக செய்துவிட்டார்கள். பண்டைய இந்தியாவின் அற்புதமான வரலாறு நமக்கு பெருமையையும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்க வேண்டும் என பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் வரலாற்று திரிபு குறித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கற்பனை கதைகளை வரலாறுகளாக சிலர் கூறுவதை ஏற்கக்கூடாது. இவ்வாறான வரலாற்று திரிபுகள்தான் நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்தாகும். அறிவியல் பார்வையை உருவாக்குவதுதான் இன்றைய காலத்தின் தேவை. பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
முன்னதாக ராமர் பாலம் விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி வந்த நிலையில், சமீபத்தில் ராமர் பாலத்திற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையென நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.