தமிழக கல்லூரிகளை காவியாக்க முயற்சியா? – அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (16:52 IST)
சென்னை பல்கலைகழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படுவதில் பராபட்சமான செயல்முறை செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைகழகத்திற்கான துணை வேந்தர் பதவிக்கு தமிழகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்காமல், வெளி மாநிலத்தவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னதாக கருத்து தெரிவித்திருந்த ஆளும்கட்சி கூட்டணியில் உள்ள ராமதாஸ் தமிழர்களுக்கு தமிழக பல்கலைகழகங்களில் பதவி அளிப்பது குறித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் அரசின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் “சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் தேர்வில் இரும்புத்திரை ஏன்? தேர்வுக்குழுத் தலைவரும், விண்ணப்பித்தவர்களில் 30பேரும் வட மாநிலத்தவர். இறுதி நேர்காணலுக்கு 12 பேர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? BC,MBC,SC/ST எவ்வளவு பேர்? காவியாக்கும் முயற்சியா இது? அதிமுக அரசின் கள்ளமெளனம் எதனால்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ”மாநில அரசுக்கு உள்ள உரிமையையும் அதிகாரத்தையும் பறிகொடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காவி மயமாக்கும் முயற்சிக்கு நிச்சயம் அனுமதி அளிக்கக்கூடாது என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்