மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது - ஸ்டாலின் பாய்ச்சல்!!

சனி, 20 மார்ச் 2021 (12:15 IST)
திமுக ஆட்சியில் தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது என கோவை தேர்தல் பிரச்சாரத்தில் மு க ஸ்டாலின் பேச்சு. 

 
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
கிணத்துக்கடவு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய மு க ஸ்டாலின், அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளாட்சி நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் செய்துள்ளதாக எடுத்துரைத்தார். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மேலும், சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன், அமைச்சர் வேலுமணி 2 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார் என தெரிவித்துள்ளதாக கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக போராடிய போது, அதற்கு ஆதரவாக மாநிலங்களவையில் பாஜகவிற்கு பயந்து பன்னீர்செல்வத்தின் மகன் வாக்களித்த நிலையில், இப்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்கி விடுவோம் என பொய்யான வாக்குறுதி அளித்து இருப்பதாக ஸ்டாலின் பேசினார்.
 
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என அவர் உறுதி அளித்தார். திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை பிரதி எடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டு உள்ளதாக பேசிய ஸ்டாலின், கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் வர அனுமதிக்கவில்லை. தற்போது தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா ஜனாதிபதியிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது என சுட்டிக்காட்டினார்.
 
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும், இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் துவங்கப்படும், நவீன புதிய புறநகரை உருவாக்கி, கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும், போக்குவரத்தை குறைக்கும் விதமாக பறக்கும் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்.
 
மேலும், பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
 
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என தான் வலியுறுத்திய நிலையில், அதிமுக அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
 
மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும், கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும், சூலூரில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார். பாஜகவை தாக்கி பேசியவர், மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது இது திராவிட மண் என குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்