ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு பணி! – அமைச்சர் உதயகுமார்

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (13:58 IST)
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணிகள் வழங்க இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பொங்கலையொட்டி அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ”அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை அனைத்து துறைகளும் சிறப்பாக செய்துள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு அம்மா பேரவை சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்க முதல்வரிடம் சிபாரிசு செய்யப்படும். அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என கூறியுள்ளார்.

கடந்த ஜல்லிக்கட்டில் கார் வென்ற ராம் குமார் குடும்ப வறுமையின் காரணமாக காரை விற்ற சம்பவம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு சரியான அங்கீகாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்