தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடியாக பேசுவதில் வல்லவர். தற்போது இவர் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வனை பணத்துக்காக பேசும் கூலிப்பேச்சாளர் என அவர் கூறியுள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது தனியார் பால்களில் ரசாயணங்கள் கலப்படம் செய்யப்படுவதாக பகீர் குண்டை தூக்கி போட்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அவர் அளித்த தொடர் பேட்டிகளிலும் அனல் தெறித்தது. இறுதியில் பால் சோதனையில் பாலில் கலப்படம் இல்லை என கூறப்பட்டது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, பாலில் ரசாயண கலப்படம் எனச் சொல்லிவிட்டு நிரூபிக்கத் தவறியதால், தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதவி விலக வேண்டும் என்றார்.
இந்நிலையில் நேற்று சிவகாசியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை விளாசித் தள்ளிவிட்டார். என் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியே வைகைச்செல்வனை இப்படிப் பேச வைத்திருக்கிறது. 500 ரூபாய் பணத்துக்காகப் பேசும் கூலிப் பேச்சாளர்தான் இந்த வைகைச் செல்வன் என்றார் அதிரடியாக.