நெல்லை கண்ணன் கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல காவல்துறை அலுவலகங்களில் பாஜகவினர் சார்பில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் இதையும் மீறி நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டுமென தமிழக பாஜக சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. அதையடுத்து நேற்று இரவு 9 மணியளவில் பெரம்பலூரில் வைத்து போலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் அமைச்சர் ஜெயகுமார். அவர் கூறியதாவது, நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை.
வன்முறையை தூண்டி தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் அவரின் பேச்சு இருந்ததன் காரணமாகவே நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பேச்சின் ஆழத்தை உணர்ந்து தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கு முன்னர் நெல்லை கண்ணனின் கைதை கொண்டாடும் விதமாக எச் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் ஆப்ரேஷன் சக்ஸஸ் என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.