தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று (மே 21) இடி, மின்னல் மற்றும் 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், 23-ம்தேதி ஒருசில இடங்களிலும், 24 முதல் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 23-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 24-ம் தேதி நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.