குப்பையோடு குப்பையாக வாக்காளர் அடையாள அட்டை - பரபரப்பான காஞ்சி நகரம்

Webdunia
ஞாயிறு, 15 மே 2016 (12:19 IST)
ஓரிக்கை பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே, குப்பையில் வீசப்பட்ட காலாவதியான வாக்காளர் அடையா அட்டைகளை, கைப்பற்றி காஞ்சிபுரம் தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
 

 
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இதனருகே உள்ள காலி நிலத்தில், தேங்கி கிடக்கும் குப்பையில் காலாவதியான வாக்காளர் அடையாள அட்டை கொட்டப்பட்டுள்ளதாக, காஞ்சிபுரம் தேர்தல் அதிகாரிகளுக்குப் தகவல் கிடைத்தது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், குப்பையிலிருந்து வாக்காளர் அடையாள அட்டையைப் பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டைகளில் 75 சதவீத அட்டைகள், காலாவதியான அடையாள அட்டைகள் எனத் தெரிந்தது.
 
மேலும், உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் சில அடையாள அட்டைகளும் இருந்தன. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஏஎஸ்பி. ஸ்ரீநாத், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அருண்தம்புராஜ் ஆகியோர் வாக்காளர் அட்டைகளை ஆய்வு செய்தனர்.
 
பின்னர், குப்பையிலிருந்து மீட்கப்பட்ட அட்டைகளை காஞ்சிபுரம் வட்டாட்சியர் ரமேஷிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார். காலாவதியான வாக்காளர் அடையாள அட்டை குப்பையில் வீசப்பட்ட சம்பவத்தினால், அப்பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்