கல்லூரி தோழிக்கு விவாகரத்து வாங்கி தருவதாக மோசடி… போலி போலிஸ் இளைஞர் கைது!
சனி, 18 செப்டம்பர் 2021 (10:47 IST)
தன்னுடன் ஒன்றாக கல்லூரியில் படித்த பெண்ணுக்கு விவாகரத்து வாங்கித் தருவதாக சுமார் 14 லட்சம் மோசடி செய்துள்ளார் அந்த நபர்.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 8 வயதில் மகள் இருக்கிறார். ஆனால் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண்மாக அவரைப் பிரிந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் லட்சுமியுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த மதன் குமார் என்பவர் முகநூல் மூலமாக பழக்கமாகியுள்ளார். அவர் தான் சென்னை புழல் சிறையில் தனது தந்தை பார்த்து வந்த ஜெயிலர் வேலையில் இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து லட்சுமி அவரிடம் தனது கணவரை விவாகரத்து செய்ய உதவி செய்யுமாறு கோரியுள்ளார்.
இதனால் லட்சுமியிடம் இருந்து வழக்கு சம்மந்தமாக எனக் கூறி சிறுக சிறுக 14 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். ஆனால் விவாகரத்து சம்மந்தமாக எந்த வேலையும் நடக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்படுகிறோமோ என்ற சந்தேகத்தில் பணத்தைத் திருப்பிக் கேட்க அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் கோபமான லட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மதன் குமார் காவல் அதிகாரி இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதன் பின்னர் தலைமறைவாக இருந்த மதன் குமாரைக் கைது செய்துள்ளனர்.