காஷ்மீர் பிரிவினைக்கு காங்கிரஸும் காரணம் என்று மாநிலங்களவையில் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது பேசிய வைகோ “காங்கிரஸினால்தான் இந்த பிரச்சினை இன்று இப்படி வந்து நிற்கிறது” என பேசியுள்ளார். தான் சார்ந்த கூட்டணி கட்சியையே வைகோ இப்படி பேசியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனங்களை தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி “வைகோ ஒரு அரசியல் பச்சோந்தி” என விமர்சித்துள்ளார். தங்களது கூட்டணி கட்சியினரே தங்கள் தலைவரை தரகுறைவாக பேசுவதை பார்த்து சும்மா இருப்பார்களா ம.தி.மு.கவினர்.
வைகோவுக்கு ஆதரவாக பேசிய ம.தி.மு.க துணை பொது செயலாளர் மல்லை சத்யா “கே.எஸ் அழகிரியின் அறிக்கை சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. வைகோவின் அர்ப்பணிப்பும், சேவையும் என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரியும். ஜனநாயகம், மக்கள் உரிமை பற்றி பேச கே.எஸ்.அழகிரிக்கு தகுதியே கிடையாது. வைகோ ஒரு பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கே வைகோவின் கருத்தை ஆதரித்துள்ளார்” என பேசியுள்ளார்.
திமுகவின் கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே ஒரு உள்கட்சி தகறாரை இந்த பிரச்சினை வளர்த்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.