பாட தெரியாதவன் பக்க வாத்தியத்தில் குறை கூறியது போல! – எடப்பாடிக்கு சவால் விடும் ஸ்டாலின்
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (19:03 IST)
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”ஸ்டாலின் என் மீது பொறாமையில் பேசுகிறார்” என்று கூறியதை விமர்சித்து நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு பயணங்கள் மேற்கொண்டு திரும்பியிருக்கின்றனர். அவர்கள் வெளிநாடு சென்றிருந்த போது “முதல்வர் முதலீட்டை ஈர்க்க போகவில்லை. சுற்றுலா சென்றிருக்கிறார். தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாகிவிட்டது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். மேலும் முதல்வர் வெற்றிகரமாக முதலீடுகளை ஈர்த்து வந்தால் தி.மு.கவே அவருக்கு பாராட்டு விழா எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று நாடு திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “ஸ்டாலின் தான் விரும்பியதை செய்ய முடியாததால், என்மீது வெறுப்பிலும், பொறாமையிலும் பொய்யான விஷயங்களை பேசி திரிகிறார்” என்று கூறியுள்ளார்.
இதற்கு ஸ்டாலின் நீண்டதொரு அறிக்கையை அளித்துள்ளார். அதில் ”திமுக காலத்தில்தான் தமிழகத்திற்கு அதிகமான முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை பற்றியெல்லாம் தெரியாத முதல்வர் ”பாட தெரியாதவன் பக்க வாத்தியத்தை குறை பேசுவது போல” நடந்து கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டது தொழில் முதலீட்டு பயணம் போல தெரியவில்லை. தான் பயணம் செய்த நேரத்தில் தன் அமைச்சர்களே தன் காலை வாரிவிட்டு விடுவார்களோ என்ற பயத்தில் அவர்களையும் அழைத்து கொண்டு உல்லாச சுற்றுலா சென்று வந்திருக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்தில் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். இதுவரை மொத்தமாக 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார்.
அதில் எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன. அதனால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு வந்துள்ள வருவாய் எவ்வளவு ஆகிய தகவல்களை வெள்ளை அறிக்கையாக கொடுக்க சொல்லி கேட்டு வருகிறேன்.
அதை வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாரா? அப்படி அவர் செய்தால் அடுத்த வாரமே திமுக அவருக்கு விழா எடுக்க தயாராக இருக்கிறது. இந்த சவாலை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாரா” என்று ஸ்டாலின் கேள்வியெழுப்பி உள்ளார்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள 443 MoU-படி பெறப்பட்ட முதலீடுகள் - தொடங்கப்பட்ட தொழிற் நிறுவனங்கள் - ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டால், 'பாராட்டு விழா' நடத்த தயாராக இருக்கிறேன்.