அம்மாவுக்கு சப்போர்ட்: எடப்பாடிக்கு ரிப்போர்ட்!? – ஸ்டாலினின் புதிய அறிக்கை

புதன், 11 செப்டம்பர் 2019 (14:21 IST)
காவிரியில் தடுப்பணை கட்டாமல், நீர் மேலாண்மை பற்றி தெரிந்து கொள்ள இஸ்ரேல் போவதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது வினோதமான வேடிக்கையாக இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.ச் நேற்று நாடு திரும்பிய அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை சுற்றுலா பயணம் சென்று வந்திருக்கிறார் என விமர்சித்தார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் நீர் மேலாண்மை குறித்து அறிந்து கொள்வதற்காக இஸ்ரேல் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறார் எடப்பாடியார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் ”காவிரியில் கொள்ளிடம் ஆற்றில் உடைந்த அணையை சரி செய்யாததால் 2000 கன அடி நீர் கடலில் சென்று கலந்து கொண்டிருக்கிறது. இன்னும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. ஆனால் இதெல்லாம் கண்டுகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த சுற்றுலா பயணத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறார்.

மறைந்த முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் நாகப்பட்டிணம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் இடையே 480 கோடி செலவில் தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் எடப்பாடி பழனிசாமி அரசு அந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. மக்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த திரு.பழனிசாமி முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தான் பேசும் மேடைகளில் எல்லாம் தி.மு.கவையும், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களையும் விமர்சித்து வந்தவர் ஜெயலலிதா. தற்போது ஜெயலலிதாவின் திட்டத்தை பாராட்டியும், அதை செயல்படுத்தாத எடப்பாடியாரை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். இது அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்