எய்ம்ஸ் கட்டுமான பணி வெறும் கானல் நீராக தான் உள்ளது - பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு

J.Durai
புதன், 6 மார்ச் 2024 (09:08 IST)
கோவை மாநகர பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை  பொதுப்பணித்துறைகளை அமைச்சர் ஏ.வ.வேலு  பர்வையிட்டார்
 
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கிராந்துகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி ஆணையாளர் கல்பனா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் ஏ.வ.வேலு பேசுகையில்,
 
கடந்த முறை கோவை வந்திருந்த போது மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டது போல கல்வி நிறுவனங்கள் நிறைந்த கோயம்புத்தூரிலும் நூலகம் கட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை முதல்வரிடம் எடுத்துச் சென்றேன். அதன் அடிப்படையில் 2024-25 நிதிநிலை அறிக்கையில் கோயம்புத்தூரில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
 
அதனை எங்கு அமைக்கலாம் என ஆய்வு செய்வதற்காக இன்று அதிகாரிகளோடு ஆய்வு செய்துள்ளோம். இரண்டு இடங்களை பார்வையிட்டுள்ளோம். ரேஸ்கோர்ஸ்ன் மையப்பகுதியில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பிலும், மத்திய சிறைச்சாலையை ஒட்டி ஏழு ஏக்கர் பரப்பளவிலும் உள்ள இரண்டு இடங்களை தேர்வு செய்துள்ளோம். முதல்வரின் ஆலோசனைப்படி இடம் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் நூலகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
 
மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியினை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். 
 
இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இப்போது அங்கு செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான பணிகளை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். பொதுப்பணி துறையின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக 2026 ஜனவரி மாதத்தில் இங்கு கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் கட்டி முடிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இது நூலகமாக மட்டுமல்லாமல் அறிவியல் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப மையமாகவும் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் கல்லூரிகள் நிறைந்த கோவையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளோம்.
 
மேற்கு புறவழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
அதன் இரண்டாம் கட்ட திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு இந்த நிதியாண்டில் பணிகள் துவங்கப்படும்' என தெரிவித்தார்.
 
எல் & டி பைபாஸ் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், 'எல் & டி நிறுவனத்தோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது எனவும், அதனை கலைந்து நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காகவே முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு வழிச்சாலைகள் நெடுஞ்சாலை துறை சார்பாக அமைத்து வருகிறோம் எனவும், தேசிய நெடுஞ்சாலைத்துறை மட்டுமே நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால், தமிழக முதல்வரின் உத்தரவின்படி மாநிலத்தில் அதிக போக்குவரத்து உள்ள சாலைகளுக்கு நிதி ஒதுக்கி நான்கு வழி சாலையாக மேம்படுத்தி வருகிறோம்' என கூறினார்.
 
மேலும், உக்கடம் மேம்பால பணிகள் தாமதமாவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், இரண்டு முறை ஒப்பந்ததாரர்களிடம் பேசி உள்ளதாகவும், மார்ச் 30ஆம் தேதிக்குள் மேம்பால பணிகள் முடிக்கப்படும் என ஒப்பந்ததாரர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
'போக்குவரத்து நெரிசல் அதிகமாவதால் சாலை விரிவாக்கம் அவசியமாகிறது. சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்படுவதும், நிலம் கையகப்படுத்துவதும் கட்டாயமாகிறது. இதன் அடிப்படையில் இந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.
 
நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது உண்மைதான். கலைஞர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நிலம் கையகப்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு பிறகு அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இப்போது அந்த பணிகளை மீண்டும் துவங்கியுள்ளோம். தற்போது அதற்கான மதிப்பீடு 1010 கோடியாக வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் இந்த பணிகளை மேற்கொண்டு இருந்தால், தற்போது அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி சுமை வந்திருக்காது. ஆனாலும் முதலமைச்சர் அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளார். அந்த பணிகளை வேகமாக செய்து வருகிறோம்.
 
அதிக அளவில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சிறப்பு வருவாய் அலுவலர்களைக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் நிலத்திற்கான மதிப்பீடு அதிகமாகி அரசுக்கு நிதிச் சுமை ஏற்படுகிறது. அதனை தவிர்க்கும் விதமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகமாக செய்து வருகிறோம்.
 
கோவை மாநகரில் கட்டப்பட்டு வரும் அவிநாசி மேம்பாலப் பணிகள் 67% முடிந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு வரை காலக்கெடு இருந்தாலும் விரைவில் கட்டுமான பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கட்டாயம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வலியுறுத்தியுள்ளோம்.
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் அறிவிக்கப்பட்டு நடைபெறாமல் உள்ளது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை எடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் சுட்டிக் காட்டினார்.
 
திமுக ஆட்சி அமைத்ததும் கிண்டியில் 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் இல்லாத சிறப்புகள் அனைத்தும் அங்கு உள்ளது. இதை 13 மாதங்களில் செய்துள்ளோம். 18 மாத ஒப்பந்த காலமாக இருந்தாலும் 13 மாதங்களில் பணிகளை முடித்து திறந்து வைத்துள்ளோம்.
 
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்பதை ஒன்றிய அரசு அரசியலுக்காக தற்போது கையில் எடுத்துள்ளது. அது வெறும் கானல் நீராக தான் உள்ளது' என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்