நிதி மோசடி வழக்கில் பணம் திரும்ப வந்ததாக ஒரு சம்பவம் உண்டா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

Mahendran

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (14:02 IST)
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ’விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்பட்டதாக, ஏதாவது ஒரு சம்பவம் உண்டா என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மயிலாப்பூரை சேர்ந்த இந்த நிதி நிறுவனம், 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உட்பட ஆறு பேர்  கைது செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில், மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி தேவநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தேவநாதனுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்று பொருளாதார குற்றப்பிரிவின் வழக்கறிஞர் வாதிட்டார். 
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, "ஓராண்டுக்கு மேலாக தேவநாதன் சிறையில் இருந்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றில், வழக்கை விரைந்து விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திரும்பப் பெற்று தந்ததாக ஒரு வழக்கையாவது கூறுங்கள்" என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.
 
இதையடுத்து, தேவநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறு வார கால இடைக்கால ஜாமீன் வழங்கினால், சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பி தருவதாக தெரிவித்தார். இந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேவநாதன் தனது சொத்துக்கள் மற்றும் ரொக்கங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். 
 
இதில், "ஒரு சென்ட் நிலம் அல்லது ஒரு ரூபாயைக் கூட மறைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நீதிபதி எச்சரித்தார். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்