ஒரு பெண் வழக்கறிஞரின் தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் இருந்து அகற்ற உத்தரவிட்ட பிறகும், அவை மீண்டும் மீண்டும் பரவி வருவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கறிஞர் ஒருவர் தனது கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் இருந்த அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அவற்றை அகற்ற கோரி அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் இருந்து அந்த வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அந்த பெண் வழக்கறிஞர் தரப்பு வழக்கறிஞர், தற்போது மூன்று இணையதளங்களில் அந்த வீடியோ பரவி வருவதாகவும், மேலும் ஒரு புதிய இணைப்பின் மூலம் பகிரப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, "வீடியோக்களை அகற்ற உத்தரவிட்ட பிறகும், தமிழகத்தில் மட்டும் அவை மீண்டும் மீண்டும் எவ்வாறு பரவுகின்றன? இந்த வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சென்னை இணையக் குற்றப்பிரிவு, விசாரணை முடிவடைந்து இறுதி அறிக்கை தயாராக இருப்பதாகவும், தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தது.
புதிய இணைப்பு உட்பட, நான்கு இணையதளங்களையும் உடனடியாக முடக்க உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.