நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள 'மனுஷி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், படத்தை நானே நேரடியாக பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறனின் 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' தயாரிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மனுஷி' திரைப்படம், பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் ஒரு பெண் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மையமாக கொண்டுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து, மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாகவும் கூறி, செப்டம்பர் 2024-ல் தணிக்கை வாரியம் படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் தயாரிப்பாளரான வெற்றிமாறன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவெடுக்க, வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி 'மனுஷி' திரைப்படத்தை பார்த்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.