கூவத்தூரில் எம்எல்ஏக்கள் பணம் வாங்கியது உண்மைதான்: அம்பலப்படுத்திய சரவணன் எம்எல்ஏ!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (09:37 IST)
கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா அணியினரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூறிய வீடியோவை பிரபல தேசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் ஓபிஎஸ் முதல்வரானார். ஆனால் அவர் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதும், சசிகலா தனது எம்எல்ஏக்களை தக்கவைக்க அனைத்து எம்எல்ஏக்களையும் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
 
அப்போது எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க அவர்களுடன் பேரம் பேசப்பட்டதாகவும், இதில் 2 கோடி ரூபாய் பணம் கிலோ கணக்கில் தங்கம் தருவதாகவும் எம்எல்ஏக்களுக்கு வாக்குறுதி அளித்ததாக முன்னரே பரபரப்பாக பேசப்பட்டது.
 
இந்நிலையில், எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்தபோது அவர்களுக்கு சசிகலா அணியினர் பல கோடி ரூபாய் கொடுத்தது குறித்து ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியில் இருந்து தப்பித்துவந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ உள்ளது.
 
அதில் பேசும் எம்எல்ஏ சரவணன், கூவத்தூர் ரிசார்ட்டில் அழைத்து செல்ல பேருந்தில் ஏற்றும்போது 2 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், பின்னர் 4 கோடி பேரம் பேசப்பட்டது என்றும், கூவத்தூர் விடுதியில் வைத்து 6 கோடி ரூபாய் வரை தருவதாக கூறினர்.
 
அதில் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுக்குதான் அதிகளவு பணமாக தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் ஓபிஎஸ் அணி சார்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் சரவணன் எம்எல்ஏ கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
அடுத்த கட்டுரையில்