கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

Siva
புதன், 22 மே 2024 (07:02 IST)
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான எண்ணிக்கையில் ஏடிஎம் மையங்கள் உள்ளதாக வெளியான செய்தி குறித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இரண்டு இடங்களில் மொத்தம் 10 ஏடிஎம் மையங்கள் அமைக்க ஏற்கனவே சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அனுமதி வழங்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிட்டாச்சி ஆகியவை மூலம் ஏடிஎம் மையங்கள் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 
 
அவற்றுள் தற்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, நடமாடும் ஏடிஎம் வாகன இயந்திரம் ஒன்று பேருந்து வளாகத்தில் பயணிகளின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. 
 
இந்நிலையில், கனரா வங்கி ஏடிஎம் மையம் வரும் 24.05.2024- க்குள்ளும்,ஹிட்டாச்சி நிறுவன ஏடிஎம் 25.05.2024-க்குள்ளும், ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் 29.05.2024-க்குள்ளும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அவ்வங்கிகள் உறுதி அளித்துள்ளனர்.
 
எனவே இம்மாத இறுதிக்குள் ஐந்து ஏடிஎம் மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்