கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் பாஜகவின் தமிழக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து அவர் மகிழ்ச்சியும், மிகுந்த சந்தோஷமும் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, அ.தி.மு.கவுடனான கூட்டணி குறித்து பேசினார். "தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க போன்ற ஒரு கூட்டாளி எங்களுடன் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மற்றவற்றை கட்சியின் மூத்த தலைவர்கள் பார்த்து கொள்வார்கள் என நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
மேலும், குஷ்பு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நேரடி வேண்டுகோள் விடுத்துள்ளார். "விஜய்யை எனக்கு நன்றாக தெரியும். நான் அவரை எப்போதும் என் தம்பியாகவே மதித்து வருகிறேன். உங்கள் நோக்கம் திமுகவை தோற்கடிப்பது. திமுகவை தோற்கடிக்க விரும்பும்போது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நினைக்கிறேன். பாஜக மற்றும் அ.தி.மு.கவுடன் சேர்ந்தால் அது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
குஷ்புவின் இந்த கோரிக்கையை விஜய் ஏற்றுக் கொள்வாரா, தமிழக வெற்றி கழகம் பாஜக-அ.தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த கூட்டணி சாத்தியமானால், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.