நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. எனக்கு நோபல் பரிசு தாருங்கள்: டிரம்ப்

Siva

ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (15:12 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட உலக அளவில் ஏழு போர்களை நிறுத்தி அமைதியை நிலைநாட்டியதாக மீண்டும் கூறியுள்ளார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், "உலக அரங்கில் இதற்கு முன் செய்யப்படாத, மதிக்கத்தக்க பல விஷயங்களை செய்து வருகிறோம். நாங்கள் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறோம்; போர்களை நிறுத்துகிறோம்," என்று தெரிவித்தார்.
 
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை, வர்த்தக ஒப்பந்தங்களை காரணம் காட்டி தான் நிறுத்தியதாக குறிப்பிட்டார்.தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான போரையும் தான் நிறுத்தியதாக கூறிய டிரம்ப், மொத்தம் ஏழு போர்களைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.
 
நோபல் பரிசு தனக்கு மறுக்கப்படுவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய டிரம்ப், "ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்தினால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று சிலர் கூறினர். ஆனால், நான் ஏற்கெனவே ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னேன்," என்றார்.
 
ரஷ்ய அதிபர் புதினுடன் தனக்கு நல்ல உறவு இருந்ததால், ரஷ்யா-உக்ரைன் போரை தீர்ப்பது எளிது என்று தான் நினைத்ததாகவும், அது எளிதாக இல்லை என்றாலும் அதை செய்து முடிப்போம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்