கேரளாவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆள் கடத்தல் மற்றும் மதமாற்ற முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் சூடுபிடித்துள்ளது.
சத்தீஸ்கர் போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கன்னியாஸ்திரிகள் மூன்று இளம் பெண்களை நர்சிங் படிக்க வைப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் அந்த மூன்று பெண்களையும் மதமாற்றம் செய்ய திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கை கேரள மாநிலக் கிறிஸ்தவ சபைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், கன்னியாஸ்திரிகள் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கைது விவகாரம் அரசியல் ரீதியாகவும் மாறிவரும் நிலையில், நாடாளுமன்றத்திலும் கேரள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.