மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தியதை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி தனது சமூக ஊடப் பக்கத்தில், "ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்கிறது!" என்று கருத்து தெரிவித்துள்ளது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆசியக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தானுடன் மோதிய மூன்று போட்டிகளிலும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியினர் எதிரணி வீரர்களுடன் கைக்குலுக்குவதை தவிர்த்தனர். மேலும், இறுதி போட்டியில் வெற்றி பெற்றபோது, பாகிஸ்தான் அமைச்சர் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தனர்.
இதேபோல், உலகக் கோப்பையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் போடும்போதும், போட்டி முடிந்த பின்னரும் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் உட்பட இரு அணி வீராங்கனைகளும் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கை குலுக்குவதை தவிர்த்தனர்.
இந்த நிலையில், இந்திய மகளிர் அணியின் வெற்றி குறித்து பா.ஜ.க. சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், "நீல நிற ஆடை அணிந்த பெண்கள், பெண்களின் சக்தியை காட்டியுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. தற்போதும் எப்போதும் இந்தியா வெற்றிபெறும்," என்று குறிப்பிட்டுள்ளது.