மீண்டும் தினகரன் அணியில் கருணாஸ்: ஆதரவு எம்எல்ஏக்கள் 37?

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (10:16 IST)
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக தினகரன் ஒரு பக்கம் எம்எல்ஏக்களை திரட்டி வருகிறார். இந்த எம்எல்ஏக்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க தீவிர முயற்சியில் உள்ளார் தினகரன். இந்த அணியில் தற்போது கருணாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் மூன்று பேர் இணைந்துள்ளதாக திவாகரன் கூறியுள்ளார்.


 
 
இதற்கு முன்னர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியபோது ஆட்சியை கைப்பற்ற சசிகலா அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்து அணி மாறாமல் பார்த்துக்கொண்டார். இதில் கூட்டணி கட்சி எம்எல்ஏவான கருணாஸ் பெயர் ஊடகங்களில் அதிகமாக அடிப்பட்டது. இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸும் இணைந்துள்ளதால் தினகரன் கழற்றி விடப்பட்டுள்ளார்.
 
இதனால் தினகரன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து தூக்க தனது ஆதரவு எம்எல்ஏக்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற கடிதம் கொடுத்துள்ளார்கள்.
 
இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் அளித்த பேட்டியில் தங்கள் அணியில் 37 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறியுள்ளார். கூட்டணி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களான கருணாஸ், தமிமூன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் தினகரன் வீட்டுக்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், கூடுதலாக 8 எம்எல்ஏக்களும், தன்னிடம் ஆதரவு தெரிவித்துள்ள 7 எம்எல்ஏக்களையும் சேர்த்து தங்களுக்கு 37 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக திவாகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்