கன்னியாகுமரியில் மீண்டும் கனமழை ; மீனவர்கள் பீதி

வியாழன், 21 டிசம்பர் 2017 (11:41 IST)
கன்னியாகுமரி கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 
வங்கக்கடலில் கடந்த நவம்பர் 30ம் தேதி உருவான ஓக்கி புயல் காரணமாக, கன்னியாகுமாரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. கடலுக்கு சென்ற பல மீனவர்கள் மாயமானார்கள். பலரின் படகுகள் காற்றில் இழுத்து செல்லப்பட்டு அருகிலுள்ள மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். பலர் கடலில் மூழ்கி இறந்தனர். 
 
அதேநேரம், தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது. இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை முடிவிற்கு வரவுள்ளது.
 
இந்நிலையில், அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் வருகிற 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக, குமரி கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
இதன் காரணமாக கேரள கடல் பகுதியில் அலை 2 மீ முதல் 2.2 மீ உயரத்திற்கு அலை வீசக்கூடும் எனப்தால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே புயலை சந்தித்த கன்னியாகுமரி மீனவ மக்கள், இந்த அறிவிப்பால் பீதியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்