ஜார்ஜ் கோட்டையில் அரசாள போகும் நம்மவர்! – அமைச்சர் தொகுதியில் கமல் போட்டியா?

வியாழன், 5 நவம்பர் 2020 (08:48 IST)
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்காக அவரது தொண்டர்கள் திருச்சியில் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நவம்பர் 7 அன்று கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மய்யத்தார் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ள நிலையில் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் “திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அரசாள போகும் நம்ம(வர்) முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. முன்னதாக கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்கவும் வாய்ப்புள்ளதாக மய்யத்தினர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் தொகுதியில் கமலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்