நான் உங்கள் வீட்டு விளக்கு ; என்னை ஏற்றி வையுங்கள் : ராமநாதபுரத்தில் கமல்ஹாசன்

புதன், 21 பிப்ரவரி 2018 (13:45 IST)
நடிகர் கமல்ஹாசன் தற்போது ராமநாதபுரத்தில் மக்களை சந்தித்து உரையாடி வருகிறார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று மாலை மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.
 
அதற்காக நேற்று இரவே ராமேஸ்வரம் சென்ற அவர் இன்று காலை 7.30 மணியளவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின், அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு சென்றார். ஆனால், அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அதையடுத்து, அங்கிருந்து அவர் திரும்பி சென்றார். அதன் பின்பு, மீனவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.  அப்போது, தங்கள் பிரச்சனைகளை கேட்க வந்த கமல்ஹாசனுக்கு மீனவ நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
 
அதையடுத்து, மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் “நான் 45 ஆண்டுகள் கழித்து இங்கு வந்திருக்கிறேன். ஊர் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால், மக்கள் அப்படியே இருக்கிறார்கள். இந்த ஊரே என் வீடுதான்.
 
உங்கள் அன்பை பார்த்து எனக்கு ஒன்று சொல்ல தோன்றுகிறது. இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்துக்கொண்டிருந்தீர்கள். இனி நான் உங்கள் வீட்டு விளக்கு. என்னை பொத்திப்பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு. உங்கள் அன்பு நீச்சலில் நீந்தத்தான் இங்கு வந்தேன்” என அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்