குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கல் – கமல்ஹாசன் அறிக்கை!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (17:33 IST)

நடிகரும் அரசியல் வாதியுமான கமல்ஹாசன் தமிழக அரசு அறிவித்த 1000 ரூபாய் உடனடியாக வழங்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமான கமல் வெளியிட்ட அறிக்கை:-

"நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்துக்காகக் கணவனைச் சார்ந்திருக்கும் சூழ்நிலையே நிலவுகிறது. தங்களது தனிப்பட்ட ஆர்வம், கனவுகளுக்காக அவர்களால் செலவு செய்ய முடியாத நிலைமையில்தான் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள். 'இல்லத்தரசிகளுக்கு ஊதியம்' எனும் மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக்கூடியது.

வீட்டைப் பார்த்துக்கொள்ளும் குடும்பத் தலைவியின் உழைப்பின் மதிப்பு, கணவனின் அலுவலக வேலை மதிப்பை விடக் குறைந்ததல்ல என்று உச்ச நீதிமன்றமே ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டது. 'இல்லத்தரசிகளுக்கு ஊதியம்' எனும் மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதைத் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக்கொண்டன. தமிழகத்தில் தொடங்கி அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரை இது எதிரொலித்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைந்த தொகை. இல்லத்தரசிகளுக்கு எதுவுமே இல்லாத நிலையில், இந்தச் சிறிய தொகையாவது அவர்களுக்குக் கிடைக்கிறதே என்றுதான் கருதவேண்டியுள்ளது. ஒரு சிறு தொடக்கம் என்கிற அளவில் மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத்தொகை திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. சமூகநலத் திட்டங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் தமிழகம் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்"

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்