நாம் தண்ணீர் கேட்டோம்; துணைவேந்தரை கொடுத்துள்ளனர் : கமல்ஹாசன் சீற்றம்

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (13:57 IST)
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவை துணை வேந்தராக ஆளுநர் நியமித்துள்ளது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
காவிரி மேலாண்மை விவகாரத்தில் கூட, கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போல், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் நேற்று நியமித்துள்ளார். இது கடும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் “காவிரி விவகாரத்தில் தமிழகமே போர்க்கோலம் பூண்ட நிலையில், சூரப்பா நியமனத்தை ஏற்க முடியாது என்றும் தமிழக பல்கலைகழக வளாகங்களை காவி மயமாக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் “ நாம் கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்டோம். ஆனால், துணைவேந்தரை பெற்றுள்ளோம். மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான பிளவு வெளிப்படையாக இருக்க முடியாது. அவர்கள் இப்படி நடந்துகொள்வதால்தான் நாம் கோர முகம் காட்ட வேண்டியுள்ளதா? அவர்கள் ஆடும் விளையாட்டின் திட்டம் என்ன என்பது தெரியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்