காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தத்தை பிரதமர் மோடி ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசும், ராணுவமும் இதற்கான பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பயங்கரவாத சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தானுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரதமர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிந்து நதியில் இருந்து பிரியும் ஏராளமான கிளை நதிகள் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளிடையே பாய்கின்றன. இதில் ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளின் மீது இந்தியா உரிமைக்கொண்டுள்ளது.
சிந்து, ஜீலம் மற்றும் செனேப் நதிகளின் மூலமாக பாகிஸ்தான் நதிநீர் பெறுகிறது. பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் குடிநீருக்கான 80 சதவீத நீர் தேவை இந்த நதிகளை நம்பியே உள்ளது. இந்நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K