கொரோனா பாதிப்பு இருப்பதாகவோ அல்லது இருப்பதாக சந்தேகிப்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவோ அறியப்படும் நபர்கள் மற்றும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசனின் வீட்டின் முன்பு நேற்று இரவு "நாங்கள் தனிமைப் படுத்தப்பட்டோம்" என்கிற நோட்டீசை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டியுள்ளனர்.
ஆனால் முகவரி குழப்பம் தொடர்பாக அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாகக் கூறி அடுத்த சில மணிநேரங்களில் அந்த ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டது. இது சம்மந்தமாக கமல் விளக்கம் அளித்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணியினர் ‘அரசியல் எதிரிகளின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக மாநகராட்சி ஊழியர்கள் வெறும் அம்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே இப்படி ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எனவே இந்த அம்புகளை எய்த வில் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியின் இந்த செயலுக்குத் தமிழக முதல்வரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் மன்னிப்பு கேட்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.