கொரோனா பாதிப்பு இருப்பதாகவோ அல்லது இருப்பதாக சந்தேகிப்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவோ அறியப்படும் நபர்கள் மற்றும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசனின் வீட்டின் முன்பு நேற்று இரவு "நாங்கள் தனிமைப் படுத்தப்பட்டோம்" என்கிற நோட்டீசை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் தவறு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் தற்போது இது குறித்து கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை. நான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். ஆழ்வார்பேட்டை வீடு எனது கட்சி அலுவலகமாக செயல்பட்டு வருவது நெருக்கமான பலருக்கும் தெரியும். நானும் எனது குடும்பத்தினரும் வருமுன் தடுக்க 2 வார காலமாக தனிமைப்படுத்துலை மேற்கொண்டுள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளார் .